இலவசத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - காங்., சிறுபான்மை தலைவர் வேண்டுகோள்

கடலுார் : சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய பா.ஜ., அரசை அகற்றிவிட்டு காங்., தலைமையிலான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என காங்., மாநில சிறுபான்மை தலைவர் பேசினார்.கடலுார் டவுன் ஹாலில் காங்., மாவட்ட சிறுபான்மையின துறை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகீம் தலைமை தாங்கினார். நகர தலைவர் தாகீர் உசேன் வரவேற்றார். மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா சிறப்புரையாற்றினார். மாநில சொத்துபாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், விஜயசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பா.ஜ., அரசு ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்ததை கண்டிப்பது, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தைத் தொடர்ந்து, அஸ்லாம் பாஷா நிருபர்களிடம் கூறுகையில், 'பா.ஜ., அரசு பொறுப்பேற்றதிலிருந்து சிறுபான்மை மக்களுக்கு எந்த திட்டத்தையும் அளிக்காமல் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. முத்தலாக் மற்றும் ஹஜ் போன்ற பயணத்திற்கு பா.ஜ., அரசு எதிராக செயல்படுகிறது. வரும் 2019ல் ராகுல் தலைமையிலான காங்., கட்சியின் நல்லாட்சி ஏற்படவேண்டும். அதற்காக சிறுபான்மையின துறை செயலாற்ற வேண்டும். தமிழக மக்கள் பணத்தையும், இலவசத்தையும் புறக்கணித்து நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

நிகழ்வுகள்